Tuesday 13 July, 2010

மதராசபட்டினம் - என் பார்வையில்!

படத்தின் விளம்பரங்களை பார்த்ததுமே இதை நல்லதொரு திரைஅரங்கில் தான் பார்க்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டேன்.அப்படி தான் நேற்று இரவு PVR சென்று பார்த்தேன். PVR -இல் பார்க்கும் முதல் படமும் இதுவே :)

படக்குழுவினரின் பெயர்களை போடும் விதத்தில் இருந்த வித்தியாசம் படம் முழுவதும் இருக்கிறது! டைட்டானிக் படம் போல ஆரம்ப காட்சிகள் இருந்தாலும்,தொடர்ந்து வரும் காட்சிகள் புதுமையாகவும் அருமையாகவும் உருவாக்கபட்டுள்ளதை நம்மால் மறுக்க இயலாது!

இந்திய சுதந்திரத்துக்கு முன் ஆரம்பித்த காதல், படம் முடிந்த பின்னும் நம்மை விட்டு நீங்காத அழகிய காதல் கதையே இந்த மதராசபட்டினம்!
இளம்பரிதியாக ஆர்யா. மல்யுத்த வீரனுக்கு ஏற்ற உடல்வாகுமுகபாவம் என தன்னை இளம்பரிதியாகவே மாற்றி படம் முழுக்க கம்பீரமாக பவனி வருகிறார். ராபர்ட் எல்லிசுடன் சண்டை போடுவதாகட்டும், AMY உடன் வெகுளியாக பேசுவதாகட்டும்காட்சிக்கு ஏற்றார் போல் தன் நடிப்பு திறமையும் நிலைநிறுத்தியிருக்கிறார்! படத்திருக்கு படம் தன் நடிப்பையும்கதாபாத்திரத்தையும் வேறுபடுத்தி தன்னையும் நல்ல ஒரு நடிகன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்! 


கதைகளிலும் கற்பனையிலும் மட்டுமே வாழ்ந்து வந்த தேவதைவெள்ளித்திரைக்கு வெளிச்சமாக வந்தது மகிழ்ச்சிஅதுவும் என் தமிழ்த்திரைக்கு மின்னலாக வந்தது பேரின்பம்! ! AMY JACKSONஎன்ன ஒரு அழகு!! 

படமே ரொம்ப அழகு. அதை பேரழகாக்கிய பெரிய பங்கு AMY JACKSON உண்டு! படம் முழுக்க அம்மணி வருவதால் படம் போறதே தெரியவில்லை.. (எங்க இருந்து டா இவள புடிச்சாங்க.. இதுக்காகவே இந்த இயக்குணர பாராட்டலாம்-நு ஒரு பேச்சு இருக்கு). நம்ம ஊர் நடிகைகளை கண்டுபிடித்து நடிக்க வைப்பதே எவ்வளவு பெரிய கஷ்டம்! அதிலும் வெளிநாட்டு நடிகைதமிழில் நடிக்க வைப்பதே பெரிய ஒரு சாதனை! ராபர்ட் எல்லிசுடன் வேண்ட வெறுப்பாக நடமாடும் காட்சியும்ஆர்யா ஆங்கிலம் பேச சிரமப்படும் போது "மறந்துட்டியா" சொல்ற காட்சியும் சரிஅவ்வளவு அழகு - நடிப்பிலும் சரி, AMY ஜாக்சனும் சரி. AMY பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்!! 
படத்தின் இன்னொரு சிறப்பம்சம் நகைச்சுவை பகுதி மற்றும் நடிகர்களின் தேர்வு! ஹனீபா வரும் காட்சிகளில் திரையரங்கம் களைக்கட்டுகிறது! பாஸ்கர்,நாசர்பட்டாபிவயதான AMY JACKSON , ஜீவாஆர்யாவின் தங்கை என்ன அத்தனை நடிகர்களின் தேர்வும் கணக்கசிதம்! ஆர்யா ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் காட்சி (A.AA., B.BB, C.CC..), "குண்டு போடறாங்க..குண்டு போடறாங்க.. ", "குண்டு போடல..போடல", "ஒரு உதவி வேணும்" போன்ற காட்சிகள் நம்மை சிரிக்கவைக்காமல் போகாது! படகில் இருந்து ஆர்யாவை தள்ளி விடும் காட்சி நம்மை நெகிழவைக்கிறது!

முதல் பாதி 105 நிமிடங்கலாம்.. படம் போனதே தெரியவில்லை! கொஞ்சம் பெரிய படம் தான். இருந்தாலும் அலுப்பு தட்டாமல் படம் போகிறது! இந்த படத்திலும் தாலி செண்டிமெண்ட் இருக்கு ஆனா அதை சொன்ன விதம் பாராட்டபடவேண்டியது! படத்தில் ஒரு விடயம் மட்டும் நெருடலாக இருந்தது.. 1945 -இல் கதைக்களம் ஆரம்பிக்கிறதுஆனால்உரையாடல் (பேச்சு தமிழ்) அப்படி தான் இருந்ததா என ஒரு சின்ன சந்தேகம்! 
தொழில்நுட்பத்தில் படம் ஓங்கியே நிற்கிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவில் காட்சிகள் நம்மை அள்ளுகின்றன. காலங்களை வேறுபடுத்தி காட்டி, காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றுகிறார். அருமையாக படம் பிடித்த காட்சிகளை அற்புதமாக ஆண்டனி எடிட்டிங் செய்திருக்கிறார்! பல இடங்களில் நம்மையும் அறியாமல் கைதட்டல் பெறுகிறார்!

GV பிரகாஷ் - பின்னணி இசையாகட்டும்பாடல் இசையாகட்டும்படத்தில் இன்னொரு ஹீரோ என்று கூட சொல்லலாம். தரமான படத்திற்கு முதல் தரமான இசையை தந்துள்ளார்! "பூக்கள் பூக்கும்", "வாம்மா துரையம்மா" ,"ஆருயிரே" என அத்தனை பாடல்களும் கவர்ந்தன! வாழ்த்துக்கள் GV பிரகாஷ்! 

அன்று சென்னை எப்படி இருக்கும் என்ன பல forward mail பார்த்தே ஆச்சர்யபட்ட நமக்கு வெள்ளித்திரையில் பார்க்கும் பொது அதன் இன்பம் இன்னும் அழகு தான். அந்த இன்பத்தை தந்தவர் கலை இயக்குனர் செல்வகுமார்! குறிப்பாக பக்கின்காம் கானல் (கூவம்) படகு போகும் காட்சி.. அடடே!!
கிரீடம்பொய் சொல்ல போறோம் அடுத்து விஜய் இயக்கியுள்ள திரைப்படம். இயக்கத்தில் பெரியதொரு முன்னேற்றம்! அழகான கதைதேர்ந்த திரைக்கதை,பொருத்தமான நடிகர்கள் தேர்வு! இப்படி ஒரு அழகான திரைப்படம் தர கடுமையாக உழைத்திருக்க வேண்டும்!!! அந்த உழைப்பின் வெளிப்பாடுதிரைப்படம் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் மனநிறைவும்மீண்டும் ஒரு முறை படம் பார்க்கலாமே என தோன்றுவது தான்!

மாறுபட்ட திரைப்படங்களை வழங்கி வரும் AGS நிறுவனத்தின் மற்றொரு படைப்பு,காவியம் இந்த மதராசபட்டினம் என்றே சொல்லலாம்!

Monday 28 June, 2010

களவாணி - என் பார்வையில்!!!

களவாணி - இந்த வெள்ளி தான் வெளியாகும் என்று நினைத்திருந்தேன்.. திடீர் என்று பார்த்தல் கடந்த வாரமே வெளி ஆகிற்று.. என் நண்பனின் ஊர்காரன் தான் "விமல்" என்பதால்அவன் படம் பார்க்க வேண்டும் என்று மிக துடிப்பாக இருந்தான்.. சரிபடம் விமர்சனம் தேடி பார்த்தால் ஒன்றும் தென்படவில்லை... ஜெட்லி அவர்களின் விமர்சனம் பார்த்ததும் ஒரு சின்ன மகிழ்ச்சி! நம்பிக்கையுடன் நண்பர்களுடன் woodlands symphony சென்றோம்.
அந்த நம்பிக்கை வீண் போகவில்லை :)  நன்றி ஜெட்லி :) 
முழுக்க முழுக்க கிராமத்து மணத்துடன் இப்படி ஒரு படம் பார்த்து நிறைய நாள் ஆச்சு.. கதை என்று பார்த்தால்பெரிதாக ஒன்றும் இல்லை. ஊரில் வெட்டியாக சுற்றும் பையன் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யும் வழக்கமான காதல் கதை தான்! ஆனால் படைக்கப்பட்ட விதம்நடிகர்களை தேர்வு செய்த விதம் நம்மை படத்தோடு ஒன்ற மிகவும் உதவுகிறது!

குறிப்பாக விமல்இளவரசுசரண்யா.. இவர்கள் மூவரின் நடிப்பில் காட்சிகள் மிளிர்கின்றன.. விமலின் எதார்த்தமான நடிப்பு கிராமத்து இளவட்டமாக பொருந்திருக்கு. இவர் செய்யும் சேட்டைகள்களவானி தனம் அனைத்தும் ரசிக்க வைக்கிறது! கஞ்சா கருப்புடன் இவர்கள் சேரும் காட்சிகளில்திரையரங்கமே குலுங்குகிறது!  நண்பனின் காதலி என்று சொல்லி கொண்டு அந்த பெண்ணை தூக்கி செல்லும் போதும்வசமாக அப்பாவிடம் மாட்டும் போதும்விமல் மிளிர்கிறார்.
ஹெலன் - திரைப்படத்தின் கதாநாயகி. அடஉண்மையாகவே பள்ளிக்கூடம் போற பொண்ணு மாதிரி தான் இருக்காங்க! படத்திற்கு தேவையான அளவு நடித்திருக்கிறார்! 
இளவரசு, நிறைய படங்களில் இவரை சரியாக பயன்படுத்தவில்லையே என்று நான் எண்ணியதுண்டு! ஆனால்இது விதிவிலக்கு! இளவரசு வந்ததும் படம் கலை கட்டுகிறது! இளவரசுவின் எதார்த்தமான பேச்சு அருமையாக பொருந்திருக்கு! மகனிடம் (விமல்) கோபப்படும் போதும் சரிமனைவியை (சரண்யா) பார்த்து ஒன்னும் செய்ய முடியாமல் இருக்கும்போதும் சரிரொம்ப இயல்பா நடிச்சிருக்கார்! "ஆணி போய் ஆவணி வந்தா பையான் top-la இருப்பான்னு கிராமத்து ஜோஷியார் சொல்லிருகாருல!" இப்படி பேசி பேசியே படம் முழுவதும்என்ன செய்தாலும் மகனுக்கு துணையாக இருக்கும் அம்மாவாக சரண்யா அசத்தியிருக்கிறார்!

திரைப்படம் முழுவதும் வட்டார மொழி அருமையாக பேசபட்டிருப்பதால்நம்மை சுற்றியே நிகழ்வது போல இருந்தது.

படத்தில் நான் ரசித்த இன்னொரு விஷயம்கண்டிப்பா ஐந்து பாடல் இருக்க வேண்டும் என்று இல்லாமல்படத்திற்கு தேவையான சில பாடல்களை தேர்வு செய்துஅதிலும் 1 - 2 நிமிட பாடல்களை வைத்தது!! SS குமரனின் இசைராஜ முகமதுவின் எடிட்டிங்ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலத்தை கூட்டுகிறது! நல்ல கதை-இயக்குனர்களை தட்டி கொடுத்துஇப்படி ஒரு படம் தயாரித்த நசிர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! 

படத்தின் மிக பெரிய பலமே திரைக்கதை தான். எங்காவது சோகமோஇல்லை செண்டிமெண்ட் காட்சிகள் வரப்போகிறது என்று நினைத்தால்அங்கேயும் ஒரு நகைச்சுவை திருப்பத்தை தூவி நம்மை "அட" போட வைக்கிறார்! அதையே கிளைமாக்ஸ்-ல கையாண்ட விதம் அருமை! முதல் திரைப்படத்திலயே உங்கள் முத்திரையை அழகாக அழுத்தமாக பதித்திருக்கிறீர்!

படம் முழுவதும் நல்லதொரு திரைப்படம் பார்க்கிறோம் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது!! இது இயக்குனரின் மிகப்பெரிய வெற்றி! ரொம்ப அருமையா இருந்தது படம்!! இயக்குனர் சற்குணம் அவர்களே - தொடர்ந்து இது போன்ற நல்ல திரைப்படங்களை எடுக்க நான் என் நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்!!  

Saturday 5 June, 2010

தூக்கு தண்டனை கூண்டு!

சமீபத்தில் நண்பர்களுடன் ராமேஸ்வரம்கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு சென்று வந்தேன். அப்பொழுதுபத்மநாபபுரம் அரண்மனை செல்ல நேரிட்டது! சுமார் 5.5 ஏக்கர் நிலபரப்பில் ஒரு பிரமாண்டம்! அதில் சுமார் 3.5 ஏக்கர் நிலபரப்பில் அரண்மனை கட்டிடங்களே இருந்தது அதன் இன்னொரு சிறப்பம்சம்! இப்படி மெய்சிலிர்த்த வேலையில் இன்னொரு தகவலை அறிந்து சற்று மிரண்டே போனேன்!

தூக்கு தண்டனை கூண்டு(Capital Punishment Cage): 

இந்த புகைப்படத்தை பார்த்தால் தூக்கு தண்டனையாஎன்று யோசிக்கலாம். ஆனால், அதன் பெயர் அப்படி தான் எழுதபட்டிருந்தது. விசாரித்த போதும் அதே பதில் தான்!

கொள்ளையர்கள்கயவர்கள்கொலையாளிகளை தண்டிக்க அன்றிருந்த மன்னரால் அமைக்கப்பட்ட கூடு தான் இது. இதன் மூலம் தண்டிக்கபடும் முறை மிகவும் கொடியது.

குற்றவாளிகளின் உடைகளை அவிழ்த்துஇந்த கூட்டில் இறுக்கி அடைக்கப்படுவார்கள். இந்த கூட்டை விட்டு வெளி வர முடியாத அளவுக்கு பூட்டுகளால் நன்கு அடைக்கபட்டிருக்கும்! இப்படி பூட்டிய குற்றவாளிகளை கள்வந்தட்டு என்னும் இடத்தில சென்று,மரங்களில் தொங்க விட்டு வந்துவிடுவார்கள்! 

அப்புறம் என்னபுழுகாக்கா முதல் அணைத்து விலங்குகளின் பசிக்கு இரையாக வேண்டியது தான்! இப்படி துடிக்க துடிக்க சித்ரவதை செய்து தண்டனையை நிறைவேற்றுவார்கள்!


இன்றைய சூழலில்இப்படி பட்ட தண்டனைகளை கொண்டு வந்தால் எப்படி இருக்கும்????

Wednesday 31 March, 2010

அங்காடி தெரு - என் பார்வையில்!

பளபளப்பான பல மாடி கட்டிடங்களில் பிழைப்பிற்காக வறுமையை வெல்ல வேண்டும் என்ற இலட்சியத்திற்காக இயலாமையுடன் பல கேவலங்களை சகித்து கொண்டு வாழும் பதின்ம வயது உழைப்பாளிகளின் கதை தான் இந்த அங்காடி தெரு திரைப்படம் . முதலாளித்துவத்தின் சக்கரங்களில் சிக்குபவர்களின் நிலைமை இவ்வளவு மோசமாகவா இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது காட்சி அமைப்பும் வசனங்களும் . இந்த கதைக்களத்தை தேர்ந்து எடுத்து சிறப்பாக காட்சிப்படுத்திய இயக்குனரின் துணிச்சல் பாராட்டுக்குரியது என்று சாதரணமாக சொல்ல முடியவில்லை.
சென்னை ரெங்கநாதன் தெருவில் உள்ள செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் என்னும் பல்பொருள் அங்காடிக்கு எப்படி வறுமையில் உழலும் தென்மாவட்ட மக்கள் அழைத்து வருவதில் ஆரம்பித்து வாட்டப்படுவது வரை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றன.


காட்சி அமைப்புகள் ."அப்பன் இல்லாதவன், தங்கச்சி இருக்குரவனா பாத்து வேலைக்கு எடு, அப்போ தான் பொத்திட்டு இருப்பானுங்க" என்று சொல்லும்போதே தெரிகிறது இவர்கள் எந்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார்கள் என்று. வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நம்மை எடுத்து செல்லும் என்ற நம்பிக்கையில் வேற்றுமண் கூட மிதிக்காத கால்கள் புதிய பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்கும் காட்சி பிழைப்பிற்கு வழி இல்லாமல் தினம் தினம் சென்னை நோக்கி கிளம்பும் அப்பாவி தமிழனையும் மொழி தெரியாத பிற மாநிலத்தவனையும ஞாபகப்படுத்தி செல்கிறது. சென்னை கோயம்பேடில் வந்து கூட்டம் கூட்டமாக இறங்கி சென்னை எந்திர வாழ்கையை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டே இவர்கள் நகரும் காட்சி மனதில் ஏனோ ரணத்தை கூட்டுகிறது .


"எச்சி கைய ஆட்டினா ஆயிரம் காக்கா, ஆனா நம்ம ஊரு பசங்க பொளைக்கட்டும்னு தான் உங்களுக்கு வேலை தரேன்" - அண்ணாச்சி இப்படி சொல்லும் பொழுது, என்ன ஒரு மனிதாபிமானம் என்று தோணும். ஆனால், அதன் பின்பு வரும் காட்சிகள் உச்சகட்டம்! உணவு உடை தங்க இடம் என்று எல்லாம் இருந்தும் முதளித்துவ உலகின் அடிமைகளாக வாழ்வது தான் நவீன மற்றும் நாகரிக உலகின் பரிசு.


வேலை பார்க்க வந்த இடத்தில பாலியல் மற்றும் உடல் ரீதியான கொடுமைகளும் ஆளாகி மனம் வெறுத்து வறுமையை வெல்ல துடிக்கும் ஏழை கூட்டம் அவர்களை அடக்கி ஆள முதலாளிகள் வளர்க்கும் கண்காணிப்பாளர்கள் என்று ஒரு கூட்டம் இவைகள் தான் முதலாளிகளின் மூலதனம் . இந்த உண்மையை செவிட்டில் அடித்து சொல்லிய இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும் .


பல்பொருள் அங்காடி ஊழியர்கள் தவிர பார்வை இழந்த முதியவரின் சுய தொழில் , குள்ள மனிதனின் வாழ்க்கை , வித்தியாசமாக யோசித்து முன்னேறும் கழிப்பிட முதலாளி , கால் பிரச்சினையால் இறக்கும் முன்னால் பல்பொருள் அங்காடி ஊழியன் ,சாலை ஓரம் தூங்கும் கட்டிட தொழிலாளிகள் ஆகியன நிதரசனத்தை உணர்த்தும் குறும்படங்கள்.
ஜோதிலிங்கமாக வரும் மகேஷ், கனியாக வரும் அஞ்சலி இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருகிரார்கள்! நடிப்பில் என்ன ஒரு தெளிவு! மகேஷ் புது முகமாம், சொல்லி தான் தெரிய வேண்டியிருக்கு ! இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார்கள்! கற்றது தமிழ்-இல் விட்ட தனது நல்mல நடிப்பை இங்கே தொடர்ந்திருக்கிறார்! நல்ல தமிழ் பேசி நடிக்கும் ஒரு நடிகை!!! இப்படி ஒரு எதார்த்தமான நடிப்புக்கு தேசிய விருது நிச்சயம்! மகேஷின் நண்பனாக வரும் பாண்டி வரும் காட்சிகள் அமர்க்களம் தான். பாண்டி - சோபியா இடையே நடக்கும் காதல் தூது அருமை! தமிழ்த்தாய் வாழ்த்தை காதல் கவிதையாக வர்ணிக்கும் பாண்டி கலக்கல்!,அதை நம்பும் சோபியா இன்னும் ஒரு படி மேல்!
 சிநேகாவிற்கு ஆல்பம் காட்டும் சரி, நண்பனுக்காக உருகும் காட்சியும் சரி, அசத்தல் நடிப்பு! மேற்பார்வையாளராக வரும் இயக்குனர் வெங்கடேஷ், கருங்காளியாகவே இருக்கிறார்!கனகச்சிதமான பாத்திர பொருத்தம்!
"அவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை", "உன் பேரை சொல்லும் போதே " என பாடல்கள் படத்தோடு ஒன்றி செல்கிறது. ஜெயமோகனின் வசனங்களில் கூர்மை அதிகம் . இயக்குனர் நடிகர்கள் தேர்வு மற்றும் கதாபாத்திரங்களின் பெயர் வைப்பதிலும் வெற்றி பெற்று உள்ளார்.

காதல், பாசம், ஊடல், சராசரி மனிதனின் பிரதிபலிப்பு என அணைத்து பரிமானங்களையும் திரையில் காட்டிய விதம் அருமை. படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களின் உரையாடல்கள் என அணைத்து விடயங்களிலும் இயக்குனர் "பலே"! வசனங்கள் ஒவ்வொன்றும் நம் மனதில் ஆழமாக பதிகின்றது, காரணம் எதார்த்தம்! ஒரு சில குறையோடு பிறந்த குழந்தையை பார்த்து மனம் குமுறும் குள்ள கணேஷன் பேசும் வசனமும் சரி, அதற்கடுத்து அவன் மனைவி கூறுவதும் சரி, ஒரே ஒரு காட்சிக்கு வரும் அஞ்சலியின் அப்பா பேசுவது, மிக அழகானவை! படத்தில் இது போன்ற வசனங்கள் ஏராளம்! கண்டிப்பா படத்தில் குறைகள் என்று பெரிதாக எதுவுமே தோன்றவில்லை! முகம் சுலிக்கும் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், குத்து பாடல், பஞ்ச் வசனங்கள் - இதை எல்லாம் தூர போட்டு அழகான ஒரு படம் எடுக்க முடியும் என மீண்டும் ஒரு முறை உரக்க சொல்லி இருக்கும் திரைப்படம்! தமிழ் சினிமா எங்கயோ போயிருச்சுன்னு அடிச்சு சொல்லலாம். உலக சினிமாவிற்கு நாங்களும் தயாராகிட்டோம்! இப்படி ஒரு படம் கொடுத்த இயக்குனர் வசந்தபாலன், இது போன்ற சினிமாவிற்கு தமிழில் ஒரு முன்னோடி! இப்போ படத்தை பற்றி யோசித்தால் கூட தோன்றும் ஒரே விடயம், ரங்கநாதன் தெருவில் உள்ள விற்பனை வியாபாரிகளின் வாழ்கை! படத்தின் மிக பெரிய வெற்றி இது தான்!


பேராண்மை தொடர்ந்து இப்படி ஒரு படத்தை கொடுத்த அயங்கரன் நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!


இன்னும் சொல்ல வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கு, குறிப்பா கடைசி 20 நிமிடங்கள் , நம்மை பாதிப்பது உறுதி! காதலை இதை விட அழகாக சொல்ல முடியாது!


ரங்கநாதன் தெருவில் எத்தனையோ நாட்கள் பல மணி நேரம் சுற்றி இருக்கிறேன். ஆனால், இந்த படத்தின் மூலம் பயணிப்பது மறக்கமுடியாத ஒன்று! மூன்று மணிநேரத்தில் எத்தனை வித்தியாசமான அனுபவங்கள்! ரங்கநாதன் தெரு - மக்கள் கூட்டம் மிக்க இடம், பலதரப்பட்ட கடைகள் இருக்கும் இடம் என்று தான் இன்றுவரை பார்த்திருக்கிறேன்! ஆனால் ஏனோ, அங்கு வேலை பார்ப்வர்கள் பற்றி என்றும் எண்ணியதும் இல்லை, என்ன தோன்றியதும் இல்லை! அவர்களும் நம்மை போன்றவர்கள் தான் என்றெண்ணியோ இருக்கலாம், இல்லை மதிக்காமலும் போயிருக்கலாம்! இரண்டாம் காரணம் மிக பொருத்தம்! ஒன்று உறுதி, இந்த படத்தை பார்த்த பிறகு மனதில் பிறக்கும் ஒரு மாற்றம் நிச்சயம் - அது, மனிதர்களை சமமாக மதிப்பது!

Saturday 6 March, 2010

அவள் பெயர் தமிழரசி - என் பார்வையில்!!!

மோசர்பேர் நிறுவனத்தின் படைப்புகள் மீது எப்பவுமே எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. மொழி, ராமன் தேடிய சீதை, பூ போன்ற படங்கள் தான் அதற்க்கு காரணம். அந்த நம்பிக்கையலே நண்பன் டிக்கெட் முன்பதிவு செய்கிறேன் என்றதும் உடனே செய்து விடு என்று சொல்லி விட்டேன். தேவிபாலா திரைஅரங்கில் நேற்று இரவு, நண்பர்கள் புடைசூழ கிளம்பினேன்!

"அவள் பெயர் தமிழரசி" என்ற அழகிய தமிழ் தலைப்பை வைத்து "தமிழிலே" வெளி வந்துள்ள திரைப்படம் ! நம்மால் கைவிடப்பட்ட பல நல்ல கலைகளில் ஒன்று "தோல் பாவை கூத்து" - ஊர் நல்ல செழிப்புடன் இருக்க, இவ்வகை கூத்து கலைஞர்கள் பத்து நாட்கள் தங்கியிருந்து கூத்து கட்டுவார்கள். இப்படி நடைபெறும் பத்தாவது நாளில் மழை வரும் என்பது நம்பிக்கை, ஐதீகம். மழையும் வரும், ஊரும் செழிப்பாகும், ஜெய் நந்தகியின் நட்புடம் அழகிய பயணம் தொடரும். தோல் பாவை கூத்து, இவர்களின் நட்பு, ஊர் குசும்பு என்று சுற்றியே கதை. 


விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் (கூட்ஸ் வண்டி)  அருமை. பின்னணி இசையிலும் அசத்தி  இருக்கிறார். PG முத்தையாவின் கேமரா அத்துணை அழகு. படத்தின் மிக பெரிய பலம். ஒவ்வொரு காட்சிகளிலும் கைதட்டல் பெறுகிறார்.


மீரா கதிரவன் முதல் திரைப்படத்திலே நல்ல இயக்குனருக்கான அத்தனை அம்சங்களையும் உண்டு  என்பதை நிரூபித்திருக்கிறார் (அடுத்த படம் எப்போ சார்??). உணர்வு பூர்வமான காட்சிகள் நிறைய இருக்கு. நம்மை அறியாமலே நம் கைகள் தட்டுவதை நம்மால் மறுக்க முடியாது (குறிப்பாக இடைவேளைக்கு பிறகு வரும் ஜெய் - நந்தகி அம்மா சந்திப்பு). வட்டார வழக்குகளை எத்தனை திரைப்படங்கள் சரியாக காட்டி இருக்கின்றன என்று பார்த்தல் மிக குறைவு தான். இந்த விடயத்தில் சாதித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

தோல் பாவை கூத்தின் சிறப்புகள், அது அழிந்து போனதை எண்ணி நந்தகி தாத்தா பேசும் வசனம், கூத்தின் பத்தாவது நாள் மழை வரும் என்றெண்ணி வானம் பார்க்கும் போன்ற காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது!


ஜெய் படத்திற்கு படம் மெருகேறிக்கொண்டே போகிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் அப்படியே சின்ன பையனாகவே இருக்கிறார். நந்தகி, இந்த கதைக்கு ஏற்ற நாயகி. தமிழரசி என்றே வாழ்ந்து விட்டார். கிளைமாக்ஸ் காட்சியில் வருபவரா முதலில் வந்தவர் என்ற ஆச்சர்யம். நடிப்பில் நல்ல வித்தியாசம். கஞ்சா கருப்பு வரும் காட்சிகளில் திரையரங்கே கலை கட்டுகிறது. ஜெய்யின் தாத்தாவாக வருபவர் வெளுத்து வாங்கிருக்கிறார். நந்தகியின் அம்மா, தாத்தா, தம்பி என அத்தனை பேரும் அம்சமாக பொருந்தியிருக்கிராரகள். நட்சத்திர பட்டாளம் என்று பெரிதாக தேவை இல்லை, கதைக்கு தேவையான சரியான நடிகர்களை தேர்வு செய்த விதத்தில் இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த ஒரு  விடயத்திலயே  கதையை நம்பி திரைப்படம் எடுக்கும் நல்ல இயக்குனர் வரிசையில் நின்றுவிட்டார். படத்தில் வரும் வசனங்கள் இன்னொரு பெரிய பலம். "மொட்டைகுண்டி", "குண்டியாட்டி குருவி" உள்ளிட்ட காட்சிகள் நம்மை நகைச்சுவையில் ஆழ்த்துவதில் ஆச்சர்யமில்லை!!   


முதல் பாதியில் தன் முத்திரையை ஆழமாக காட்சிகளால் அழகாக தந்து முத்திரையை பதிந்திருக்கிறார், இயக்குனர். இரண்டாம் பாதியில் ஒரு சில படங்களை நினைவுபடுத்தினால் கூட, கிளைமாக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறார். படம் மெல்ல நகர்ந்தாலும் நல்ல திரைப்படம் பார்க்கிறோம் என்ற நம்பிக்கை இருந்தது. கதை சொல்லப்பட்ட விதம், காட்சிகள் நம்மை இன்னும் கவனமாக படம் பார்க்க உதவுகிறது! இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமான காட்சிகள் இருந்திருந்தால் படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும், இப்பொழுதும் பேசப்படும், நல்லதொரு திரைப்படம் தந்ததற்காக! 


குத்து பாட்டு, இரட்டை வர்த்த வசனங்கள், வேண்டுமென்றே திணிக்கப்பட்ட பஞ்ச் வசனங்கள், மசாலா காட்சிகள் நிறைந்த திரைப்படம் இது அல்ல. 


என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இயக்குனர்  மற்றும் குழுவினருக்கு !!