Wednesday 31 March, 2010

அங்காடி தெரு - என் பார்வையில்!

பளபளப்பான பல மாடி கட்டிடங்களில் பிழைப்பிற்காக வறுமையை வெல்ல வேண்டும் என்ற இலட்சியத்திற்காக இயலாமையுடன் பல கேவலங்களை சகித்து கொண்டு வாழும் பதின்ம வயது உழைப்பாளிகளின் கதை தான் இந்த அங்காடி தெரு திரைப்படம் . முதலாளித்துவத்தின் சக்கரங்களில் சிக்குபவர்களின் நிலைமை இவ்வளவு மோசமாகவா இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது காட்சி அமைப்பும் வசனங்களும் . இந்த கதைக்களத்தை தேர்ந்து எடுத்து சிறப்பாக காட்சிப்படுத்திய இயக்குனரின் துணிச்சல் பாராட்டுக்குரியது என்று சாதரணமாக சொல்ல முடியவில்லை.
சென்னை ரெங்கநாதன் தெருவில் உள்ள செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் என்னும் பல்பொருள் அங்காடிக்கு எப்படி வறுமையில் உழலும் தென்மாவட்ட மக்கள் அழைத்து வருவதில் ஆரம்பித்து வாட்டப்படுவது வரை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றன.


காட்சி அமைப்புகள் ."அப்பன் இல்லாதவன், தங்கச்சி இருக்குரவனா பாத்து வேலைக்கு எடு, அப்போ தான் பொத்திட்டு இருப்பானுங்க" என்று சொல்லும்போதே தெரிகிறது இவர்கள் எந்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார்கள் என்று. வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நம்மை எடுத்து செல்லும் என்ற நம்பிக்கையில் வேற்றுமண் கூட மிதிக்காத கால்கள் புதிய பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்கும் காட்சி பிழைப்பிற்கு வழி இல்லாமல் தினம் தினம் சென்னை நோக்கி கிளம்பும் அப்பாவி தமிழனையும் மொழி தெரியாத பிற மாநிலத்தவனையும ஞாபகப்படுத்தி செல்கிறது. சென்னை கோயம்பேடில் வந்து கூட்டம் கூட்டமாக இறங்கி சென்னை எந்திர வாழ்கையை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டே இவர்கள் நகரும் காட்சி மனதில் ஏனோ ரணத்தை கூட்டுகிறது .


"எச்சி கைய ஆட்டினா ஆயிரம் காக்கா, ஆனா நம்ம ஊரு பசங்க பொளைக்கட்டும்னு தான் உங்களுக்கு வேலை தரேன்" - அண்ணாச்சி இப்படி சொல்லும் பொழுது, என்ன ஒரு மனிதாபிமானம் என்று தோணும். ஆனால், அதன் பின்பு வரும் காட்சிகள் உச்சகட்டம்! உணவு உடை தங்க இடம் என்று எல்லாம் இருந்தும் முதளித்துவ உலகின் அடிமைகளாக வாழ்வது தான் நவீன மற்றும் நாகரிக உலகின் பரிசு.


வேலை பார்க்க வந்த இடத்தில பாலியல் மற்றும் உடல் ரீதியான கொடுமைகளும் ஆளாகி மனம் வெறுத்து வறுமையை வெல்ல துடிக்கும் ஏழை கூட்டம் அவர்களை அடக்கி ஆள முதலாளிகள் வளர்க்கும் கண்காணிப்பாளர்கள் என்று ஒரு கூட்டம் இவைகள் தான் முதலாளிகளின் மூலதனம் . இந்த உண்மையை செவிட்டில் அடித்து சொல்லிய இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும் .


பல்பொருள் அங்காடி ஊழியர்கள் தவிர பார்வை இழந்த முதியவரின் சுய தொழில் , குள்ள மனிதனின் வாழ்க்கை , வித்தியாசமாக யோசித்து முன்னேறும் கழிப்பிட முதலாளி , கால் பிரச்சினையால் இறக்கும் முன்னால் பல்பொருள் அங்காடி ஊழியன் ,சாலை ஓரம் தூங்கும் கட்டிட தொழிலாளிகள் ஆகியன நிதரசனத்தை உணர்த்தும் குறும்படங்கள்.
ஜோதிலிங்கமாக வரும் மகேஷ், கனியாக வரும் அஞ்சலி இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருகிரார்கள்! நடிப்பில் என்ன ஒரு தெளிவு! மகேஷ் புது முகமாம், சொல்லி தான் தெரிய வேண்டியிருக்கு ! இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார்கள்! கற்றது தமிழ்-இல் விட்ட தனது நல்mல நடிப்பை இங்கே தொடர்ந்திருக்கிறார்! நல்ல தமிழ் பேசி நடிக்கும் ஒரு நடிகை!!! இப்படி ஒரு எதார்த்தமான நடிப்புக்கு தேசிய விருது நிச்சயம்! மகேஷின் நண்பனாக வரும் பாண்டி வரும் காட்சிகள் அமர்க்களம் தான். பாண்டி - சோபியா இடையே நடக்கும் காதல் தூது அருமை! தமிழ்த்தாய் வாழ்த்தை காதல் கவிதையாக வர்ணிக்கும் பாண்டி கலக்கல்!,அதை நம்பும் சோபியா இன்னும் ஒரு படி மேல்!
 சிநேகாவிற்கு ஆல்பம் காட்டும் சரி, நண்பனுக்காக உருகும் காட்சியும் சரி, அசத்தல் நடிப்பு! மேற்பார்வையாளராக வரும் இயக்குனர் வெங்கடேஷ், கருங்காளியாகவே இருக்கிறார்!கனகச்சிதமான பாத்திர பொருத்தம்!
"அவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை", "உன் பேரை சொல்லும் போதே " என பாடல்கள் படத்தோடு ஒன்றி செல்கிறது. ஜெயமோகனின் வசனங்களில் கூர்மை அதிகம் . இயக்குனர் நடிகர்கள் தேர்வு மற்றும் கதாபாத்திரங்களின் பெயர் வைப்பதிலும் வெற்றி பெற்று உள்ளார்.

காதல், பாசம், ஊடல், சராசரி மனிதனின் பிரதிபலிப்பு என அணைத்து பரிமானங்களையும் திரையில் காட்டிய விதம் அருமை. படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களின் உரையாடல்கள் என அணைத்து விடயங்களிலும் இயக்குனர் "பலே"! வசனங்கள் ஒவ்வொன்றும் நம் மனதில் ஆழமாக பதிகின்றது, காரணம் எதார்த்தம்! ஒரு சில குறையோடு பிறந்த குழந்தையை பார்த்து மனம் குமுறும் குள்ள கணேஷன் பேசும் வசனமும் சரி, அதற்கடுத்து அவன் மனைவி கூறுவதும் சரி, ஒரே ஒரு காட்சிக்கு வரும் அஞ்சலியின் அப்பா பேசுவது, மிக அழகானவை! படத்தில் இது போன்ற வசனங்கள் ஏராளம்! கண்டிப்பா படத்தில் குறைகள் என்று பெரிதாக எதுவுமே தோன்றவில்லை! முகம் சுலிக்கும் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், குத்து பாடல், பஞ்ச் வசனங்கள் - இதை எல்லாம் தூர போட்டு அழகான ஒரு படம் எடுக்க முடியும் என மீண்டும் ஒரு முறை உரக்க சொல்லி இருக்கும் திரைப்படம்! தமிழ் சினிமா எங்கயோ போயிருச்சுன்னு அடிச்சு சொல்லலாம். உலக சினிமாவிற்கு நாங்களும் தயாராகிட்டோம்! இப்படி ஒரு படம் கொடுத்த இயக்குனர் வசந்தபாலன், இது போன்ற சினிமாவிற்கு தமிழில் ஒரு முன்னோடி! இப்போ படத்தை பற்றி யோசித்தால் கூட தோன்றும் ஒரே விடயம், ரங்கநாதன் தெருவில் உள்ள விற்பனை வியாபாரிகளின் வாழ்கை! படத்தின் மிக பெரிய வெற்றி இது தான்!


பேராண்மை தொடர்ந்து இப்படி ஒரு படத்தை கொடுத்த அயங்கரன் நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!


இன்னும் சொல்ல வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கு, குறிப்பா கடைசி 20 நிமிடங்கள் , நம்மை பாதிப்பது உறுதி! காதலை இதை விட அழகாக சொல்ல முடியாது!


ரங்கநாதன் தெருவில் எத்தனையோ நாட்கள் பல மணி நேரம் சுற்றி இருக்கிறேன். ஆனால், இந்த படத்தின் மூலம் பயணிப்பது மறக்கமுடியாத ஒன்று! மூன்று மணிநேரத்தில் எத்தனை வித்தியாசமான அனுபவங்கள்! ரங்கநாதன் தெரு - மக்கள் கூட்டம் மிக்க இடம், பலதரப்பட்ட கடைகள் இருக்கும் இடம் என்று தான் இன்றுவரை பார்த்திருக்கிறேன்! ஆனால் ஏனோ, அங்கு வேலை பார்ப்வர்கள் பற்றி என்றும் எண்ணியதும் இல்லை, என்ன தோன்றியதும் இல்லை! அவர்களும் நம்மை போன்றவர்கள் தான் என்றெண்ணியோ இருக்கலாம், இல்லை மதிக்காமலும் போயிருக்கலாம்! இரண்டாம் காரணம் மிக பொருத்தம்! ஒன்று உறுதி, இந்த படத்தை பார்த்த பிறகு மனதில் பிறக்கும் ஒரு மாற்றம் நிச்சயம் - அது, மனிதர்களை சமமாக மதிப்பது!

10 comments:

  1. டேய் பார்வை நல்லா எழுதப்பட்டு இருக்கு .

    ReplyDelete
  2. Nice review.. keep up the good work... Priya S

    ReplyDelete
  3. John-Nice to see ur reviews in Tamil and its encouraging.

    Totally its good movie and Nice Review..Keep up the good work

    ReplyDelete
  4. hi da, really nice... keep it up buddy
    -Suthakar [TCE-IT]

    ReplyDelete
  5. ."அப்பன் இல்லாதவன், தங்கச்சி இருக்குரவனா பாத்து வேலைக்கு எடு, அப்போ தான் பொத்திட்டு இருப்பானுங்க" என்று சொல்லும்போதே தெரிகிறது இவர்கள் எந்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார்கள் என்று.

    ....... nicely written. Good review.

    ReplyDelete
  6. நல்ல நேர்மையான விமர்சனம் நண்பரே...................வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம்...

    //
    ஆனால் ஏனோ, அங்கு வேலை பார்ப்வர்கள் பற்றி என்றும் எண்ணியதும் இல்லை, என்ன தோன்றியதும் இல்லை!
    //
    நிச்சயமான உண்மை...

    //
    இந்த படத்தை பார்த்த பிறகு மனதில் பிறக்கும் ஒரு மாற்றம் நிச்சயம் - அது, மனிதர்களை சமமாக மதிப்பது!
    //
    மிக சிறந்த படம் என்பதற்கு இதுவே சாட்சி. "நான் கடவுள்" படம் பார்த்த பிறகு, எங்கு பிச்சை எடுப்பவர்களை பார்த்தலும், யாரோட உருப்படியோ இவர்கள் என்று எனக்கு தோன்றும். அதே போல் இப்படமும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  8. கருத்துரை தெரிவித்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றி!!

    ReplyDelete