Wednesday 31 March, 2010

அங்காடி தெரு - என் பார்வையில்!

பளபளப்பான பல மாடி கட்டிடங்களில் பிழைப்பிற்காக வறுமையை வெல்ல வேண்டும் என்ற இலட்சியத்திற்காக இயலாமையுடன் பல கேவலங்களை சகித்து கொண்டு வாழும் பதின்ம வயது உழைப்பாளிகளின் கதை தான் இந்த அங்காடி தெரு திரைப்படம் . முதலாளித்துவத்தின் சக்கரங்களில் சிக்குபவர்களின் நிலைமை இவ்வளவு மோசமாகவா இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது காட்சி அமைப்பும் வசனங்களும் . இந்த கதைக்களத்தை தேர்ந்து எடுத்து சிறப்பாக காட்சிப்படுத்திய இயக்குனரின் துணிச்சல் பாராட்டுக்குரியது என்று சாதரணமாக சொல்ல முடியவில்லை.
சென்னை ரெங்கநாதன் தெருவில் உள்ள செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் என்னும் பல்பொருள் அங்காடிக்கு எப்படி வறுமையில் உழலும் தென்மாவட்ட மக்கள் அழைத்து வருவதில் ஆரம்பித்து வாட்டப்படுவது வரை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றன.


காட்சி அமைப்புகள் ."அப்பன் இல்லாதவன், தங்கச்சி இருக்குரவனா பாத்து வேலைக்கு எடு, அப்போ தான் பொத்திட்டு இருப்பானுங்க" என்று சொல்லும்போதே தெரிகிறது இவர்கள் எந்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார்கள் என்று. வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நம்மை எடுத்து செல்லும் என்ற நம்பிக்கையில் வேற்றுமண் கூட மிதிக்காத கால்கள் புதிய பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்கும் காட்சி பிழைப்பிற்கு வழி இல்லாமல் தினம் தினம் சென்னை நோக்கி கிளம்பும் அப்பாவி தமிழனையும் மொழி தெரியாத பிற மாநிலத்தவனையும ஞாபகப்படுத்தி செல்கிறது. சென்னை கோயம்பேடில் வந்து கூட்டம் கூட்டமாக இறங்கி சென்னை எந்திர வாழ்கையை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டே இவர்கள் நகரும் காட்சி மனதில் ஏனோ ரணத்தை கூட்டுகிறது .


"எச்சி கைய ஆட்டினா ஆயிரம் காக்கா, ஆனா நம்ம ஊரு பசங்க பொளைக்கட்டும்னு தான் உங்களுக்கு வேலை தரேன்" - அண்ணாச்சி இப்படி சொல்லும் பொழுது, என்ன ஒரு மனிதாபிமானம் என்று தோணும். ஆனால், அதன் பின்பு வரும் காட்சிகள் உச்சகட்டம்! உணவு உடை தங்க இடம் என்று எல்லாம் இருந்தும் முதளித்துவ உலகின் அடிமைகளாக வாழ்வது தான் நவீன மற்றும் நாகரிக உலகின் பரிசு.


வேலை பார்க்க வந்த இடத்தில பாலியல் மற்றும் உடல் ரீதியான கொடுமைகளும் ஆளாகி மனம் வெறுத்து வறுமையை வெல்ல துடிக்கும் ஏழை கூட்டம் அவர்களை அடக்கி ஆள முதலாளிகள் வளர்க்கும் கண்காணிப்பாளர்கள் என்று ஒரு கூட்டம் இவைகள் தான் முதலாளிகளின் மூலதனம் . இந்த உண்மையை செவிட்டில் அடித்து சொல்லிய இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும் .


பல்பொருள் அங்காடி ஊழியர்கள் தவிர பார்வை இழந்த முதியவரின் சுய தொழில் , குள்ள மனிதனின் வாழ்க்கை , வித்தியாசமாக யோசித்து முன்னேறும் கழிப்பிட முதலாளி , கால் பிரச்சினையால் இறக்கும் முன்னால் பல்பொருள் அங்காடி ஊழியன் ,சாலை ஓரம் தூங்கும் கட்டிட தொழிலாளிகள் ஆகியன நிதரசனத்தை உணர்த்தும் குறும்படங்கள்.
ஜோதிலிங்கமாக வரும் மகேஷ், கனியாக வரும் அஞ்சலி இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருகிரார்கள்! நடிப்பில் என்ன ஒரு தெளிவு! மகேஷ் புது முகமாம், சொல்லி தான் தெரிய வேண்டியிருக்கு ! இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார்கள்! கற்றது தமிழ்-இல் விட்ட தனது நல்mல நடிப்பை இங்கே தொடர்ந்திருக்கிறார்! நல்ல தமிழ் பேசி நடிக்கும் ஒரு நடிகை!!! இப்படி ஒரு எதார்த்தமான நடிப்புக்கு தேசிய விருது நிச்சயம்! மகேஷின் நண்பனாக வரும் பாண்டி வரும் காட்சிகள் அமர்க்களம் தான். பாண்டி - சோபியா இடையே நடக்கும் காதல் தூது அருமை! தமிழ்த்தாய் வாழ்த்தை காதல் கவிதையாக வர்ணிக்கும் பாண்டி கலக்கல்!,அதை நம்பும் சோபியா இன்னும் ஒரு படி மேல்!
 சிநேகாவிற்கு ஆல்பம் காட்டும் சரி, நண்பனுக்காக உருகும் காட்சியும் சரி, அசத்தல் நடிப்பு! மேற்பார்வையாளராக வரும் இயக்குனர் வெங்கடேஷ், கருங்காளியாகவே இருக்கிறார்!கனகச்சிதமான பாத்திர பொருத்தம்!
"அவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை", "உன் பேரை சொல்லும் போதே " என பாடல்கள் படத்தோடு ஒன்றி செல்கிறது. ஜெயமோகனின் வசனங்களில் கூர்மை அதிகம் . இயக்குனர் நடிகர்கள் தேர்வு மற்றும் கதாபாத்திரங்களின் பெயர் வைப்பதிலும் வெற்றி பெற்று உள்ளார்.

காதல், பாசம், ஊடல், சராசரி மனிதனின் பிரதிபலிப்பு என அணைத்து பரிமானங்களையும் திரையில் காட்டிய விதம் அருமை. படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களின் உரையாடல்கள் என அணைத்து விடயங்களிலும் இயக்குனர் "பலே"! வசனங்கள் ஒவ்வொன்றும் நம் மனதில் ஆழமாக பதிகின்றது, காரணம் எதார்த்தம்! ஒரு சில குறையோடு பிறந்த குழந்தையை பார்த்து மனம் குமுறும் குள்ள கணேஷன் பேசும் வசனமும் சரி, அதற்கடுத்து அவன் மனைவி கூறுவதும் சரி, ஒரே ஒரு காட்சிக்கு வரும் அஞ்சலியின் அப்பா பேசுவது, மிக அழகானவை! படத்தில் இது போன்ற வசனங்கள் ஏராளம்! கண்டிப்பா படத்தில் குறைகள் என்று பெரிதாக எதுவுமே தோன்றவில்லை! முகம் சுலிக்கும் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், குத்து பாடல், பஞ்ச் வசனங்கள் - இதை எல்லாம் தூர போட்டு அழகான ஒரு படம் எடுக்க முடியும் என மீண்டும் ஒரு முறை உரக்க சொல்லி இருக்கும் திரைப்படம்! தமிழ் சினிமா எங்கயோ போயிருச்சுன்னு அடிச்சு சொல்லலாம். உலக சினிமாவிற்கு நாங்களும் தயாராகிட்டோம்! இப்படி ஒரு படம் கொடுத்த இயக்குனர் வசந்தபாலன், இது போன்ற சினிமாவிற்கு தமிழில் ஒரு முன்னோடி! இப்போ படத்தை பற்றி யோசித்தால் கூட தோன்றும் ஒரே விடயம், ரங்கநாதன் தெருவில் உள்ள விற்பனை வியாபாரிகளின் வாழ்கை! படத்தின் மிக பெரிய வெற்றி இது தான்!


பேராண்மை தொடர்ந்து இப்படி ஒரு படத்தை கொடுத்த அயங்கரன் நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!


இன்னும் சொல்ல வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கு, குறிப்பா கடைசி 20 நிமிடங்கள் , நம்மை பாதிப்பது உறுதி! காதலை இதை விட அழகாக சொல்ல முடியாது!


ரங்கநாதன் தெருவில் எத்தனையோ நாட்கள் பல மணி நேரம் சுற்றி இருக்கிறேன். ஆனால், இந்த படத்தின் மூலம் பயணிப்பது மறக்கமுடியாத ஒன்று! மூன்று மணிநேரத்தில் எத்தனை வித்தியாசமான அனுபவங்கள்! ரங்கநாதன் தெரு - மக்கள் கூட்டம் மிக்க இடம், பலதரப்பட்ட கடைகள் இருக்கும் இடம் என்று தான் இன்றுவரை பார்த்திருக்கிறேன்! ஆனால் ஏனோ, அங்கு வேலை பார்ப்வர்கள் பற்றி என்றும் எண்ணியதும் இல்லை, என்ன தோன்றியதும் இல்லை! அவர்களும் நம்மை போன்றவர்கள் தான் என்றெண்ணியோ இருக்கலாம், இல்லை மதிக்காமலும் போயிருக்கலாம்! இரண்டாம் காரணம் மிக பொருத்தம்! ஒன்று உறுதி, இந்த படத்தை பார்த்த பிறகு மனதில் பிறக்கும் ஒரு மாற்றம் நிச்சயம் - அது, மனிதர்களை சமமாக மதிப்பது!

Saturday 6 March, 2010

அவள் பெயர் தமிழரசி - என் பார்வையில்!!!

மோசர்பேர் நிறுவனத்தின் படைப்புகள் மீது எப்பவுமே எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. மொழி, ராமன் தேடிய சீதை, பூ போன்ற படங்கள் தான் அதற்க்கு காரணம். அந்த நம்பிக்கையலே நண்பன் டிக்கெட் முன்பதிவு செய்கிறேன் என்றதும் உடனே செய்து விடு என்று சொல்லி விட்டேன். தேவிபாலா திரைஅரங்கில் நேற்று இரவு, நண்பர்கள் புடைசூழ கிளம்பினேன்!

"அவள் பெயர் தமிழரசி" என்ற அழகிய தமிழ் தலைப்பை வைத்து "தமிழிலே" வெளி வந்துள்ள திரைப்படம் ! நம்மால் கைவிடப்பட்ட பல நல்ல கலைகளில் ஒன்று "தோல் பாவை கூத்து" - ஊர் நல்ல செழிப்புடன் இருக்க, இவ்வகை கூத்து கலைஞர்கள் பத்து நாட்கள் தங்கியிருந்து கூத்து கட்டுவார்கள். இப்படி நடைபெறும் பத்தாவது நாளில் மழை வரும் என்பது நம்பிக்கை, ஐதீகம். மழையும் வரும், ஊரும் செழிப்பாகும், ஜெய் நந்தகியின் நட்புடம் அழகிய பயணம் தொடரும். தோல் பாவை கூத்து, இவர்களின் நட்பு, ஊர் குசும்பு என்று சுற்றியே கதை. 


விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் (கூட்ஸ் வண்டி)  அருமை. பின்னணி இசையிலும் அசத்தி  இருக்கிறார். PG முத்தையாவின் கேமரா அத்துணை அழகு. படத்தின் மிக பெரிய பலம். ஒவ்வொரு காட்சிகளிலும் கைதட்டல் பெறுகிறார்.


மீரா கதிரவன் முதல் திரைப்படத்திலே நல்ல இயக்குனருக்கான அத்தனை அம்சங்களையும் உண்டு  என்பதை நிரூபித்திருக்கிறார் (அடுத்த படம் எப்போ சார்??). உணர்வு பூர்வமான காட்சிகள் நிறைய இருக்கு. நம்மை அறியாமலே நம் கைகள் தட்டுவதை நம்மால் மறுக்க முடியாது (குறிப்பாக இடைவேளைக்கு பிறகு வரும் ஜெய் - நந்தகி அம்மா சந்திப்பு). வட்டார வழக்குகளை எத்தனை திரைப்படங்கள் சரியாக காட்டி இருக்கின்றன என்று பார்த்தல் மிக குறைவு தான். இந்த விடயத்தில் சாதித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

தோல் பாவை கூத்தின் சிறப்புகள், அது அழிந்து போனதை எண்ணி நந்தகி தாத்தா பேசும் வசனம், கூத்தின் பத்தாவது நாள் மழை வரும் என்றெண்ணி வானம் பார்க்கும் போன்ற காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது!


ஜெய் படத்திற்கு படம் மெருகேறிக்கொண்டே போகிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் அப்படியே சின்ன பையனாகவே இருக்கிறார். நந்தகி, இந்த கதைக்கு ஏற்ற நாயகி. தமிழரசி என்றே வாழ்ந்து விட்டார். கிளைமாக்ஸ் காட்சியில் வருபவரா முதலில் வந்தவர் என்ற ஆச்சர்யம். நடிப்பில் நல்ல வித்தியாசம். கஞ்சா கருப்பு வரும் காட்சிகளில் திரையரங்கே கலை கட்டுகிறது. ஜெய்யின் தாத்தாவாக வருபவர் வெளுத்து வாங்கிருக்கிறார். நந்தகியின் அம்மா, தாத்தா, தம்பி என அத்தனை பேரும் அம்சமாக பொருந்தியிருக்கிராரகள். நட்சத்திர பட்டாளம் என்று பெரிதாக தேவை இல்லை, கதைக்கு தேவையான சரியான நடிகர்களை தேர்வு செய்த விதத்தில் இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த ஒரு  விடயத்திலயே  கதையை நம்பி திரைப்படம் எடுக்கும் நல்ல இயக்குனர் வரிசையில் நின்றுவிட்டார். படத்தில் வரும் வசனங்கள் இன்னொரு பெரிய பலம். "மொட்டைகுண்டி", "குண்டியாட்டி குருவி" உள்ளிட்ட காட்சிகள் நம்மை நகைச்சுவையில் ஆழ்த்துவதில் ஆச்சர்யமில்லை!!   


முதல் பாதியில் தன் முத்திரையை ஆழமாக காட்சிகளால் அழகாக தந்து முத்திரையை பதிந்திருக்கிறார், இயக்குனர். இரண்டாம் பாதியில் ஒரு சில படங்களை நினைவுபடுத்தினால் கூட, கிளைமாக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறார். படம் மெல்ல நகர்ந்தாலும் நல்ல திரைப்படம் பார்க்கிறோம் என்ற நம்பிக்கை இருந்தது. கதை சொல்லப்பட்ட விதம், காட்சிகள் நம்மை இன்னும் கவனமாக படம் பார்க்க உதவுகிறது! இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமான காட்சிகள் இருந்திருந்தால் படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும், இப்பொழுதும் பேசப்படும், நல்லதொரு திரைப்படம் தந்ததற்காக! 


குத்து பாட்டு, இரட்டை வர்த்த வசனங்கள், வேண்டுமென்றே திணிக்கப்பட்ட பஞ்ச் வசனங்கள், மசாலா காட்சிகள் நிறைந்த திரைப்படம் இது அல்ல. 


என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இயக்குனர்  மற்றும் குழுவினருக்கு !!

Friday 5 March, 2010

சார் தபால்!!

சூர்யா, வீட்டின் கடைக்குட்டி. அப்போது மூன்றாம் வகுப்பு பயின்று வந்தான். பெற்றோர் இருவரும் அரசு பணியில் இருப்பவர்கள். அவன் அண்ணன், அக்கா படிப்பு தொடர்பாக நிறைய தபால்களும் வரும். எனவே, அவர்கள் வீட்டில் கடித தொடர்புகள் அதிகம் இருக்கும். நம்ம சூர்யாவிற்கும் வரும்; வருட இறுதியில் பள்ளி கட்டணம் மற்றும் தேர்வு முடிவுகள் போன்ற கடிதங்கள். அதுவும் அவன் அப்பா பெயர் போட்டு தான் வரும். சூர்யா அக்கா செல்லம். பாடம் சொல்லி தருவது எல்லாம் அக்கா தான்!

நாளடைவில், சூர்யா தனக்கு கடிதமே வருவதில்லை என்ற ஏக்கம் அவனை புரட்டிபோட்டது. இதனால், தனக்கு வீட்டில் மரியாதை குறைந்து விட்டது என்று எண்ண ஆரம்பித்தான்.

இப்படி நாட்கள் சென்று கொண்டே இருக்க, ஒரு சனிக்கிழமை காலை 11 மணி அளவில், வீட்டில் அனைவரும் இருக்கும் நேரம் பார்த்து,

"சார் தபால்" என்று குரல் ஒலிக்க, சூர்யா அப்பா விரைந்தார்!

"சார், சூர்யா என்ற பேருக்கு ஒரு கடுதாசி வந்திருக்கு, அவர கொஞ்சம் கூப்பிடறீங்களா?" என்றார் தபால்காரர்.

"எங்க இருந்து? ஸ்கூல்-ல இருந்தா பா?" என்று கேட்க , "இல்ல சார், இது வேற ஏதோ தபால்" என்றார். வீட்டில் அனைவரின் கவனமும் சட்டென்று சூர்யா மீது திரும்பியது!

அப்பா, "டே சூர்யா, உனக்கு ஏதோ லெட்டர் வந்திருக்கு டா, கொஞ்சம் வாயேன்" என்றார்.

முதல் குரலுக்கு வரவில்லை. மீண்டும் அம்மா கூப்பிட்டவுடன் வீர நடை போட்டு வந்தான் சூர்யா!

"என்ன பா, எனக்கா லெட்டர் வந்திருக்கு?" என்றான் ஆச்சர்யமாக , "ஆமாம் டா" அப்பா சொன்னார்.

                                              
 அவன் முகத்தில் ஏதோ சாதித்துவிட்டது போல் ஒரு கர்வம், பெருமை எல்லாம் சேர்ந்து இருந்தது!! தபால்காரர், கடிதத்தை தர, பெரும் புன்னகையோடு வாங்கினான். வீட்டில் அனைவரின் கவனமும் தன் மீது தான் என்று நினைத்து, கம்பீரமாக நடக்க ஆரம்பித்தான்.

"டே, யாருடா உனக்கு லெட்டர் போட்டது?" அப்பாவிடம் இருந்து குரல் வர, "என் friend பா" என்று விருடென்று கிளம்பி தனது அறையை நோக்கி விரைந்தான்!

திடீரென்று யாரோ தடுப்பதை உணர்ந்து, நிமிர்ந்து பார்த்தால் அக்கா. "யாரு டா அது உனக்கு லெட்டர் போடுறது? எங்க கொடு பாப்போம்" என அந்த கடிதத்தை வாங்கினாள். சூர்யாவை பார்த்து "ஏன் டா இப்படி எல்லாம் செய்யுற, உனக்கு யாரு இதெல்லாம் சொல்லி தந்தா?" என்று சொல்ல ஒன்னுமே தெரியாததை போல நின்றான். கடிதத்தில் இருந்த கையெழுத்து தன்னுடையது தான் என்பதை அக்கா கண்டு பிடித்துவிட்டால் என்பதை உணர்ந்தான். வீட்டில் அனைவரும் இவனது சேட்டையை பார்த்து "கொல்" என சிரித்தனர். சூர்யா மட்டும் நினைத்துக்கொண்டான் "அடுத்த முறை லெட்டர் எழுதுறப்போ, friend -a எழுத சொல்லணும்!!

இன்றைக்கும் சூர்யா வீட்டில் இருக்கும் பொது தபால் வந்தால், ஒரு கேலி பார்வை சூர்யா மீது இருக்கும்.

குறிப்பு :  இது கற்பனை கதை அல்ல,என் நண்பன் ஒருவன் சிறுவயதில் செய்த சேட்டை. பெயர் மட்டும் மாற்றிவிட்டேன். இன்றைக்கும் இது போன்ற சித்து விளையாட்டு செய்து கொண்டு தான் இருக்கிறான்.


தொடரும்..

Wednesday 3 March, 2010

கிரிக்கெட் தொடர்பதிவு


தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர் மீன்துள்ளியான் அவர்களுக்கு நன்றி .
இத்தொடர்பதிவின் விதிமுறைகள்
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

--------------------------------------------------
                                                    

1. பிடித்த கிரிக்கெட் வீரர்? (கள்?) :  சச்சின், மைகேல் பெவன், லான்ஸ் க்ளுஸ்னர், டிராவிட், மேலே படத்தில் உள்ளவர் (நான் தான்) 

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? : ஜெப்ரி பாய்காட் , மியாண்டட்,  


3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : வால்ஷ், கும்ப்ளே :)


4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : ஸ்ரீ சாந்த் , 


5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் : ஷேன் வார்ன், முரளி


6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : சுனில் ஜோஷி, பிராடு ஹாக் 


7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : சச்சின், சேவாக்,  மார்டின், ரோஸ் டைலர் 


8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் :  ஜெப்ரி பாய்காட் 


9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா, கில்கிறிஸ்ட், யுவராஜ், மைக்கெல் பெவன் ,லான்ஸ் 
குளுஷ்ணர், சயீத் அன்வர், நீல் ஜான்சன்


10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் :  ஜிம்மி ஆடம்ஸ்


11. பிடித்த களத்தடுப்பாளர் : ஜான்டி ரோட்ஸ் , கிப்ஸ்


12. பிடிக்காத களத்தடுப்பாளர் : கும்ளே, கங்குலி


13. பிடித்த ஆல்ரவுண்டர் : லான்ஸ் குளுஷ்ணர் , கல்லிஸ், வெட்டோரி 


14. பிடித்த நடுவர் : சைமன் டவ்பல், டேவிட் ஷெபர்ட் , ஆசாத் ராப்


15. பிடிக்காத நடுவர் : அசோகா தே சில்வா


16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : டோனி கிரிக், ரவி சாஸ்திரி 


17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : ரமேஷ் ராஜா, சஞ்சய் மஞ்சரேகர் , சித்து 


18. பிடித்த அணி : இந்தியா, தென் ஆப்பிரிக்கா 


19. பிடிக்காத அணி : அப்படி எதுவும் கிடையாது. 


20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- பிடித்த அணிகள்தான். அட எல்லா 
போட்டிகளும் பாப்பேன் 


21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- இலங்கை - பெர்முடா, இலங்கை - கென்யா...


22. பிடித்த அணி தலைவர் : கங்குலி, டோனி, ரிக்கி பாண்டிங், வெட்டோரி 


23. பிடிக்காத அணித்தலைவர் : ஷஹித் அப்ரிடி


24. பிடித்த போட்டி வகை : டெஸ்ட் போட்டிகள் 


25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், ஹேய்டன்-கில்கிறிஸ்ட், ஜெயசூரியா- கலுவிதாரனா 


26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : எதுவும் தோன்றவில்லை.


27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : சச்சின் ,லாரா , பாண்டிங், டிராவிட்


28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : சச்சின் ,லாரா , வார்னே ,ஸ்டீவ் வாக்

29. பிடித்த விக்கெட் கீப்பர் : கில்கிறிஸ்ட் , பௌச்சர், ஹீலி 


30 பிடித்த அதிரடி ஆட்டக்காரர் :  பொல்லார்ட், சேவாக் 


தொடர்பதிவுக்கு அழைப்பவர்கள்:
பாலமுருகன்  

Monday 1 March, 2010

விண்ணை தாண்டி வருவாயா - என் பார்வையில்!



AR ரஹ்மான் இசை, சிம்பு - த்ரிஷா ஜோடி. ரொம்ப நாள் கழித்து தமிழில் ஒரு மென்மையான காதல் படம் என்று எதிர்பாத்து போனேன் (சிம்பு படம்னு ஒரு பயம் இருந்தது :) )


கண்டதும் ஹீரோயின் மேல ஹீரோக்கு காதல், அண்ணன் சண்டைக்கு வருவான், அப்புறம் வீட்ல தெரியும், ஹீரோயின்க்கு கல்யாணம் நிச்சயம் பண்ணுவாங்க, கல்யாணம் வரைக்கும் போகும், நின்னுரும், திரும்ப காதல் இப்படின்னு ரொம்ப புதுமையா இருக்க கதையை எப்படி தான் இயக்குனர் தேடி கண்டுபிடிச்சார்னு தெரியலை. ஹீரோக்கு பெரிய இயக்குனர் ஆகணும்னு ஆசை, லட்சியம். அப்படியே படம் முடியும் போது வெற்றிபடத்தோட இயக்குனரா வராரு (அதுவும் இதே கதையை வெச்சு!!))


சிம்பு தன்னோட வழக்கமா பாணில இருந்து நடிப்பது  எவ்ளோ கஷ்டம். அந்த விஷயத்தை இங்க ரொம்ப நல்லாவே பன்னிருகார். த்ரிஷா பார்க்க அழகா இருக்காங்க. நல்லாவும் நடிச்சிருக்காங்க. படத்தின் முதல் பாதியில் வரும் மூன்று பாடல்களை எடுத்த விதம் உண்மைலயே பிரமிக்க வைத்தது! சும்மா பின்னி எடுத்திருக்காங்க. மனோஜ் கேமரா புகுந்து விளையாடிருக்கு. 


சில இடங்களில் வசனங்கள், கணேஷின் நடிப்பு நல்லா இருக்கு (குறிப்பா Worth -ஆ இல்லையா?? ) .




படத்துல நம்ம ரசிக்க வைக்கிற விஷயம் AR ரஹ்மான் இசை. "ஹோசான", "ஓமான பெண்ணே" எல்லாம் சும்மா ஜில்லுனு இருக்கு. இந்த ஜில் மட்டும் இல்லேன்னா எப்பவோ தியேட்டர் விட்டு தெரிச்சு ஓடிருப்பேன்.


உதாரணதுக்கு, சிம்பு சொல்ற ஒரு வசனம், "நான் ஒரு பெரிய பாக்ஸர், என்னோட இந்த அடிலயே உங்களுக்கு அது தெரியும்". இது மாதிரி பல இடங்களில் ஏன் எதுக்கு வருதுனே தெரியாது. இதையும் தாண்டி படத்துல எதாச்சும் இருக்கும்னு நெனைச்சா, நெனச்சுக்க வேண்டியது தான்.  அதை படம் முடியுறப்ப நமக்கே தெள்ள தெளிவா புரியும்.


கிளைமாக்ஸ்-ல நமக்கு ஒரு திருப்பம் வேற.. அவர் இயக்குர படத்துக்கு எப்படியோ கஷ்ட பட்டு எங்கயோ இருக்க ஹீரோயின படம் பார்க்க வர வைப்பார். அது எப்படின்னு த்ரிஷா கேப்பாங்க.. அதுக்கு நான் எடுக்குற அடுத்த படத்தை பாரு புரியும்னு சொல்லுவார் சிம்பு. (அய்யயோ, என்னது மறுபடியும் முதல்ல இருந்தா!!!))


காதலர்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்னு சொன்னான். லவ் சப்ஜெக்ட் - அப்படின்னு. நான் திரும்ப கேட்டேன். அலைபாயுதே, இதயம், காதல் வைரஸ் மாதிரி படங்கள் கூட அப்படி தான் ஆனா அது எப்படி நமக்கு பிடிச்சதுன்னு.. அவன் கிட்ட பதில் இல்ல..


காதல் திரைப்படம்.. எவ்ளோ உணர்வுகள், உருக்கங்கள் இருக்கணும். கதைக்களம் தமிழ் சினிமாக்கு ரொம்ப புதுசு (?!@??!!).. அதனாலையோ என்னவோ எனக்கு படம் பாக்குறப்ப லவ் பீல் வராம கடுப்பு பீல் தான் வந்தது.


கதை தான் படத்துல பெருசா இல்ல, திரைக்கதை நல்லா பண்ணிருக்கலாம் ? இயக்குனர் ஹீரோயின் அண்ணனுக்கு பின்னணி குரல் கொடுப்பதிலே கவனம் செலுத்திடார் போல..
அதானால தான் என்னவோ இரண்டாம் பாதில எவ்ளோ பேர் வந்து தள்ளினாலும் படம் நகர மாட்டேங்குது..


வேண்டுகோள்கள் :
இயக்குனருக்கு : சுப்பிரமணியபுரம் படத்தை விமர்சனம் செய்றதுக்கு முன்னாடி உங்க படம் எப்படின்னு பாருங்க..
AR ரஹ்மான் : உங்களோட உழைப்பை இது மாதிரி படத்துக்கு வீணாக்காதீங்க..


சிம்பு : உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்?
பொதுமக்கள் (நான்) : ஊர்ல எவ்ளோ படங்கள் ஓடுது .. மாமா நாம ஏன் இந்த படத்துக்கு வந்தோம்?
மாமா (நண்பன்): அது நம்ம தலைஎழுத்து !!